பூனாச்சி
கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒரு colleague-க்கு ஒரு முறை புத்தகம் பரிசளிக்க வேண்டிய ஒரு தருணம். தரமான தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பை பரிசளிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
ஒரு முறை பெங்களூரில் உள்ள சம்பகா புத்தகக் கடைக்கு சென்றிருந்தேன். அங்கே ‘admins’ recommendations’ என ஒரு sticky note-ல் எழுதப்பட்டிருந்த நூல் பரிந்துரைகளில் பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’ இடம்பெற்றிருந்தது. பூனாச்சியை அதுவரை வாசித்திருக்காவிட்டாலும், ‘மாதொருபாகன்’ எனும் நாவலையும் ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ கட்டுரைத் தொகுப்பையும் வாசித்திருந்ததால், பெருமாள் முருகன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அந்த புத்தகத்தை என் colleague-க்கு பரிசளித்தேன். வாசித்துவிட்டு, பரிசுக்கு நன்றி, அருமையான வாசிப்பனுபவம் என்றார். அட, ஆங்கிலத்தில் வாசித்தவருக்கே அவ்வளவு பிடித்திருந்ததா என்ற எண்ணம் ஏற்படுத்திய curiosity-யில் நானும் வாசித்துவிட்டேன் (தமிழில்).
வாசித்திருந்திருக்காவிட்டால், என்ன ஒரு அருமையான அனுபவத்தைத் தவற விட்டிருப்போம் என எண்ணிப் பார்க்கிறேன். ‘என்னைக் கவரும் புத்தகங்கள்’ என்பதற்கு நான் வகுத்திருக்கும் இலக்கணம், நான் வாழும் உலகிலிருந்து எனக்கு சற்று விடுதலை தந்து, அதன் உலகத்துக்குள் என்னை இழுத்துச் செல்வதாய் இருக்கவேண்டும். பூனாச்சி, துளியும் தவறாமல் அதைச் செய்கிறாள். பூனாச்சி வாசிக்கையில் தெருவில், அக்கம் பக்கத்தில், பூங்காக்களில் ஓடித்திரியும் ஒவ்வொரு குழந்தையும் பூனாச்சியாகத் தெரிகிறார்கள்.
மாதொருபாகன் சர்ச்சைக்குப் பிறகு பெருமாள் முருகன் நொந்து போய் எழுதுவதையே கைவிடத்துணிந்தார். மனம் தேரியதும் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ எழுதினார். ஏன் ஆடு? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுத பேரச்சம்.சரி விலங்குகளைப் பற்றி எழுதுவோம். விலங்குகளில் ஆழ அறிந்தவை ஐந்து தான். நாயும் பூனையும் கவிதைக்குரியவை. மாடு, பன்றி இரண்டும் மீண்டும் சர்ச்சை விளைவிப்பவை. மிஞ்சியது ஆடு தான் (எழுத்திலும் ஆடு தான் பலி). கதையில் ஓட்டம் வேண்டுமென்றால் வெள்ளாட்டை விட நல்ல தேர்வு என்னவாக இருக்க முடியும்? அதனால் ஆடு, என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டதைப் போலவே கதை அவவ்ளவு வேகம்! மூன்று நாட்களில் வாசித்து முடித்து விட்டேன்.
கதையின் மாந்தர்கள் மிகவும் சொற்பம். அதிலும் ஒரு கிழவன், ஒரு கிழவி இவர்கள் தான் மையப்பாதிரங்கள். காமியோ ரோல்களாக அவர்களின் மகள், மாமியார், பகாசுரன், ஒரு வியாபாரி, ராசாங்கத்து அதிகாரி, சில மேய்ப்பர்கள், ஒரு ஒடக்காரன் (காயடிப்பவன்), ஒரு பேறுக்காரன், இவர்கள் அவ்வப்போது வந்து போகிறார்கள். அவர்களின் role என்னவென்று சொன்னால் போதும், அவர்களுக்கு பெயர் வைத்து வாசகர்களை திகைப்படையச் செய்யவேண்டாம் என அற்புதமாக முடிவெடுத்துவிட்டார் பெருமாள் முருகன்.
ஆனால், நமக்கு ஒரு பெரும் பணியைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கிழவனும் கிழவியும் வளர்க்கும் ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் பெயரிட்டிருக்கிறார். கள்ளி, செம்மி, கடுவாயன், பீத்தன், பொருமி, ஊத்தன், உழும்பன். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு எங்கிருந்தோ யார் பெற்ற பிள்ளையோ, புழுக்கை போல் இருக்கும் ஒரு கறுப்பு நிற வெள்ளாட்டுக்குட்டி (வெள்ளாடு, செம்மறியாடு என்பது ஆட்டின் வகைகள்) வந்து சேர்கிறது. அதற்கு ‘பூனாச்சி’ என எதற்குப் பெயரிடுகிறாள் அந்தக் கிழவி எனும் காரணமே சுவாரசியமானது.
திட்டிக்கொணடே பூனாச்சியின் உயிரைக் காப்பாற்றி, உடம்பை ஓரளவுக்குத் தேற்றுகிறாள். கள்ளி செம்மி இவற்றின் பிள்ளைகளான மற்ற ஆட்டுக்குட்டிகளுடன் பூனாச்சி வளர்கிறாள். ஆடுகளைப் பொருத்தவரை சகோதரத்துவம் என்று சொன்னால், உறவுமுறை தவறாகிவிடும். அதனால், அந்த ஆட்டுக்குட்டிகள் cousins-ஐப் போல் வளர்கின்றன. அதற்குமுன் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளைப் பேணியிருந்தாலும், பூனாச்சி தான் கிழவியின் மகள் திருமணமாகி அசலூருக்குச் சென்ற பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறாள்.
ஆடுகள் சிந்திக்குமா? ஆடுகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளுமா? சிந்தித்தால், பேசிக்கொண்டால் எப்படியிருக்கும் எனும் புனைவு தான் பூனாச்சி. பூனாச்சிக்கு பூவன் என்று ஒரு காதலன் கிடைக்கிறான். அவர்களுக்குள்ளான காதலைப் புரிந்துகொள்ளாமல் கிழவி அவர்களைப் பிரித்துவிடுகிறாள். பூனாச்சி பருவமடைந்தபின் வேறொரு கிழட்டுக் கிடாயுடன் கூடச்செய்கிறார்கள். பூனாச்சி வேண்டாவெறுப்பாக இணங்குகிறாள். யார் யாருடன் இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என முடிவு செய்ய இவர்கள் யார் என பூனாச்சி வெறுப்படைகிறாள். இப்படியாக, ஆடுகளின் உலகத்தில் ஏற்படும் பிறப்பு, உயிர்ப்பு, இருப்பு, நட்பு, பாசம், வெறுப்பு, சுதந்திரம்/சுதந்திரமின்மை, பருவமெய்தல், காமம், காதல், முக்கோணக் காதல், பொறாமை, heartbreak, பிரிவு, விரகம், பசி, பஞ்சம், கோபம், தாயுணர்வு, சேயுணர்வு, survival, பஞ்சம், பிணி, மற்றவரின் இறப்பு ஏற்படுத்தும் துயரம், வெறுமை, சோர்வு, முதற்கொண்டு, இறப்பு வரையான ஆடுகளின் புற/அக உலகை விவரிக்கும் கதை தான் பூனாச்சி.
பெருமாள் முருகன், ஆடு மேய்ப்பர்களுக்குத் துணையென ‘மேசாசுரன்’ (மேஷம்) என்ற ஒரு தெய்வத்தை invent செய்திருக்கிறார். ஒரு கிடாயின் உயிரைக் காப்பாற்றி, அதை மேசாசுரனுக்கு நேந்து பலியிடுவதற்கும், அது எதிர்பாராத அசம்பாவிதங்களால் இறப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று மேய்ப்பர்கள் வைத்திருக்கும் தர்க்க நியாயத்தைக் கூறுகிறார். காயடிக்கும் ஒடக்காரன், தொழிலில் கைதேர்ந்தவனாக இருப்பினும், ஒரு உயிரின் உடல்தேவைகளைப் புறக்கணிக்கும் செயலைச் செய்கிறோமே என்ற குற்ற உணர்வு கொண்டவனாகவே இருக்கிறான். மனிதர்கள் பிற உயிர்களிடம் கருணை காட்டும் நல்லவர்கள் தான். ஆனால், survival of the fittest எனும் உயிரியல் கோட்பாட்டின் அடிப்படையில், எந்த கருணைக்கும் எல்லை உள்ளது என உணர்த்துகிறது இந்தக் கதை.
ஆடு மேய்ப்பர்களின் வாழ்வில் ஆடுகள் மூலம் எவ்வாறு பொருளாதாரம் அமைகிறது என்று சொல்லியிருக்கிறார். இது வெகுவான அரசியல் கதை இல்லை என்றாலும், ஆங்காங்கே ராசாங்கம் பற்றிக் கூறி அரசியல் விதைகள் தூவியிருக்கிறார். மழை என்பது எப்படி விவசாயியின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், ஆடு மேய்ப்பர்களின் வாழ்க்கையைக் கூட பாதிக்கிறது என்ற கண்ணோட்டம் நமக்கும் கிடைக்கிறது. இந்தக் கதை நடைபெறும் காலக்கோடு என்று ஒன்றில்லை. நம் நாட்டில் கிராமங்கள் இருக்கும் வரை இந்தக் கதை எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.
மூடு — பெண் ஆடு, கிடாய் — ஆண் ஆடு, சினை — கருவுற்றிருக்கும் ஆடு, ஒடையடித்தல் — காயடித்தல்/castration, நஞ்சுக்கொடி — தொப்புள்கொடி, பூங்குட்டி — பருவம் எய்தாத மூட்டுக்குட்டி, பயராவுதல் — பருவமெய்துதல், உழுதல் — கிடாய் மூட்டுடன் புணர்தல், மண்டாள்/மல்லுதல் — சிறுநீர் கழித்தல், அரம் — பெண்குறி, கொழாய் — மூடுகளின் vaginal fluid, கொடி — கிடாய்களின் ஆண்குறி, இவ்வாறாக ஒரு சொல்லகராதியை முன்பு நாம் அறிந்திருக்காவிட்டாலும், கதையின் போக்கிலேயே நாம் புரிந்துகொள்ளும் அளவிற்கு, non-imposing-ஆகத்தான் உள்ளது.
என் வாசிப்பின் இடையிடையே வந்து போனது ஒரேயொரு எண்ணம் தான். இவ்வளவு அருமையாக சொலவங்களும் வட்டார வழக்குகளும் கையாண்டிருக்குப் பட்டிருக்கும் இந்தக் கதை ஆங்கிலத்தில் எப்படி எழுதப்பட்டிருக்கும்? ஆங்கிலத்தில் படித்த அந்த colleague-க்கும் பிடித்திருக்கிறது என்றால் அவ்வளவு அருமையாகவா இருக்கும் அந்த மொழிபெயர்ப்பும்? எதற்கும் ஆங்கிலத்திலும் ஒருமுறை வாசித்துப் பார்க்கவேண்டும் 🙂