Ek Maar Dho Tukkada — Na. Muthukumar
ஒரே சொற்களைக் கொண்டு வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா? பார்ப்போம்.
கல்லறைப் பூக்களுக்கு என்ன மதிப்பு?
“கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய் தான் சேராது”… (தேவதையைக் கண்டேன், காதல் கொண்டேன்)
தன்னைக் கல்லறைப் பூவாய் கருதுகிறான் அன்புக்காக ஏங்கிக் கிடக்கும் ஒருவன். கூந்தலை போய்ச் சேர்வதற்கு தனக்கு தகுதியில்லை என நினைத்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காண்கிறான்.
“கல்லறை மீது தான்
பூத்த பூக்கள்
என்று தான்
வண்ணத்துப் பூச்சிகள்
பார்த்திடுமா?”… (உனக்கென இருப்பேன், காதல்)
வண்ணத்துப் பூச்சிக்கு ஒரு பூவின் பிறப்பிடம் பற்றி என்ன கவலை?
தெரிந்தே தவறிழைக்கும் என்னை என்னவென்று நொந்து கொள்வது? அல்லது, ஏன் நொந்து கொள்ள வேண்டும்?
“கையைச் சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளை போல்
உனையே மீண்டும் நினைக்கிறேன்”… (உன் பேரைச் சொன்னாலே, டும் டும் டும்)
விரும்பி தானே தீக்குள் கையை விட்டேன்? இப்பொழுது ஏன் அழுகிறேன்?
“தீயென தெரிந்தும் அடி நானே
திரும்பவும் உனைத் தொட வந்தேனே…
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே”… (ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி)
நீ அருகிலிருந்ததும் இல்லாததும் தான் வேறுபாடு.
ஒரே சரக்கை ஒரே நேரத்தில் வெவ்வேறு பெட்டிக்குள் அடைத்து வெவ்வேறு வாடிக்கையாளருக்கு விற்க முடியுமா?
முதல் வாடிக்கையாளர் கணவனால் துன்புறுத்தப்பட்டு வாழ்நாள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவள். அவளிடம் விற்கப்பட்ட சரக்கு என்ன?
“கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே”… (பேசுகிறேன்.. பேசுகிறேன், சத்தம் போடாதே)
என்றவாறு நேஹா பஸினின் கனிவான குரலில் விற்கப்பட்டது இந்த சரக்கு.
அதே சரக்கு காதலில் வெற்றி பெற எண்ணி கடுமையாக வயலில் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு வலிமையான இளைஞனுக்கும் தேவைப்பட்டது. இம்முறை சரக்கை அந்த இளைஞனுக்கு விற்றவர், தன் உறுதியான குரலைக் கொண்டு கேட்பவருக்கு நம்பிக்கை மருந்தளிக்க வல்ல எஸ். பி. பாலசுப்ரமணியம்.
“கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது”… (ஆகாயம் இதனை நாள், சம்திங் சம்திங்)
ஆணையும் பெண்ணையும் ஒரே போல் வர்ணிக்க முடியுமா?
ஒரு ஆண் அவன் விரும்பும் பெண்ணை யாரெல்லாம் எப்படியெல்லாம் விரும்புவார்கள் என்று வர்ணிக்கிறான்.
“வீதி உலா நீ சென்றால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும்
வீடு செல்ல சூரியனும்
அடம் பிடிக்குமே”… (கண்மூடி திறக்கும் போது, சச்சின்)
ஒரு ஆணுக்காக பல பெண்கள் சண்டை போடுகிறார்கள். அவன் போகுமிடமெல்லாம் துரத்தி துரத்தி அவன் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள். அவன் எப்படிப்பட்டவன் என.
“நீ வீதி வலம் வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும்
கண்ணா”…(ராத்திரியின் சொந்தக்காரா, பார்த்தாலே பரவசம்)
என உருகி உருகி வர்ணிக்கிறார்கள்.
முதலில் கேட்ட கேள்விக்கு விடை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அந்த கேள்வியை என்னுள் எழுப்பியவர் யார்? தி நேம் இஸ் நா.முத்துக்குமார்.